பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அரிசி தானம். தானம் மற்றும் அதன் பலன்கள்



நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன், அந்த தானத்தை செய்தால் அந்த பலன் என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் என்றால் எல்லாராலும் எல்லா தானத்தையும் செய்ய இயலாது. அவரவர் சக்திக்கு ஏற்ப தான் தானங்களை செய்ய இயலும். மேலும் வகைப்படுத்தி பலன்களை சொல்லும்போது, தானத்தின் மீது ஒரு ஆர்வமும் பிடிப்பும் தன்னாலே வரும்.

பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன்  ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.
ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா – கெட்டவரா என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

ஆடைகள் தானம் :

ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுகபோக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் தானம் :

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று
(இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் தானம் :

பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகல விதமான நோய்களும் தீரும்.

தீப தானம் :

இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒரு முறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி தானம் :

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி-பருத்தி தானம் :

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால்ப ருத்தி தானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டு விடலாம்.


Comments