மனித வாழ்வின் அன்றாட உணவாக மாறிப்போன நெல்லின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? இல்லையேல் தெரிந்து கொள்ளுங்கள்.
நெல் அல்லது அரிசி என்பது புல் வகையை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது தென்கிழக்காசியாவில் தோன்றியது.
இது ஈரநிலங்களில் வளரக்கூடியது. நெற்பயிர் சராசரியாக ஐந்து மாதங்கள் வரை வளரக் கூடிய ஓர் ஆண்டுத் தாவரமாகும்.
இப்பயிரின் விதையின் உமி என அழைக்கப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின் உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு மேலுறை நீக்கப்பட்ட விதை அரிசி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அரிசிக்கு முளைக்கும் திறன் கிடையாது. நெல், சோளம், கோதுமைக்கு அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் ஆகும்.
வரலாறு
உலகில் முதன் முதலாக ஆசிய நெல் , ஆப்பிரிக்க நெல் என இரு இன நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. ஆசியாவில் நெல் சாகுபடி கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. மேற்கூறிய இருவகை நெல் இனங்களின் பொதுவான முன்னோடி காட்டு நெல் இனம் Oryza rufipogan ஆகும்.
ஆசிய நெல் சிற்றினம் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இந்தியப்பகுதியில் Oryza sativa var. indica வும், சீனப்பகுதியில் Oryza sativa var. japonica வும் தோன்றின.இந்தியாவில், ஔவையார் மற்றும் பல பழம்பெரும் புலவர்கள் பாடிய நெல் மற்றும் அரிசி பற்றிய பாடல்கள் பல உள்ளன. நெல் விளையும் பகுதிகளில், நெல் நடுதல், அறுவடை போன்ற காலத்தையொட்டி பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. நெல் பற்றிய சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளன.
ஆப்பிரிக்காவில் நெல் சுமார் கி.மு 1500 முதல் பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு 1500 – 800 ஆம் ஆண்டுகளில், நைகர் நதித்துவாரத்தில் பயிரிடப்பட்டு, பின் செனெகல் நாடு வரை பரவியது. எனினும், இதன் சாகுபடி மேற்கொண்டு பரவவில்லை.
அரேபியர்களால் கி.பி 7 – 11 ஆம் நூற்றாண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிய நெல் இனங்கள் பயிரிடப்பட்டன. ஜப்பானில் நெற்பயிர் சீனாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது என ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால், ஜப்பானியர்கள் முன்னாளில் நீளமான தண்டுடைய, நீரில் வளரும் நெற்பயிர்களை படகில் சென்று அறுவடை செய்ததாக சில குறிப்புகளும் உள்ளன. உலர்நில (மானாவாரி) நெல் சாகுபடி கி.மு 1000 ஆம் ஆண்டு ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னாளில், கி.மு 300 இல் தற்கால நீர்நில சாகுபடி முறை யாயோய் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிய நெல் இனம் மத்திய கிழக்கு நாடுகளிலும் மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் சுமார் கி.மு 800 இல் பயிரிடத் துவங்கப்பட்டது. மவுரியர்கள் நெற்பயிரை ஸ்பெயின் நாட்டுக்கு அறிமுகப்படுத்தினர்.
15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நெல் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கும் பின்னர் எல்லா கண்டங்களுக்கும் பரவியது.

Comments
Post a Comment